சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் 2024 ஒக்டோபர் 13 முதல் 17 வரை நடைபெற்ற 149வது அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் (IPU) பேரவையில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி  இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன ஆகியோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற ஒத்துழைப்பு மற்றும் நிர்வாகத்தை முன்னேற்றுவதற்கான உலகளாவிய அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் வகையில் 130 நாடுகளைச் சேர்ந்த 630 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதில் கலந்துகொண்ட இலங்கை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன ஆகியோர் முக்கியமான கூட்டங்களிலும் சந்திப்புக்களிலும் பங்குபற்றினர்.  

இம்முறை பேரவையில் 54 பாராளுமன்ற சபாநாயகர்கள், 36 பிரதி சபாநாயகர்கள், 36% பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 45 வயதிற்குக் குறைந்த 25% பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். பாராளுமன்ற வகிபங்கில், உள்ளடங்கிய தன்மை மற்றும் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கான கூட்டு அர்ப்பணிப்பை பலதரப்பட்ட பிரதிநிதிகளின் பங்களிப்பு கோடிட்டுக் காட்டுகின்றது. 

பொது மாநாடு, பாராளுமன்ற செயலாளர் நாயகங்களின் சங்கத்தின் (ASGP) கூட்டம், ஆசிய-பசுபிக் குழுக் கூட்டம், நிலைபேறான அபிவிருத்தி பற்றிய நிலைக்குழுக் கூட்டம் மற்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் மன்றம் உள்ளிட்ட பிரதான கூட்டங்களில் இலங்கைப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இலங்கை பிரதிநிதிகளின் பங்கேற்பு உலகளாவிய பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் பெறுமதியான பங்களிப்பை ஏற்படுத்தியது. 

இதன்போது இலங்கைப் பிரதிநிதிகள் அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி டுலியா அக்சன் (Tulia Ackson), பாலின கூட்டு நிகழ்ச்சித்திட்ட ஆலோசகர் பிரிகிட் பிலியோன் (Brigitte Filion), IPU வின் SDG நிகழ்ச்சித்திட்ட அதிகாரி இஸபெல் ஒபாடியாரு (Isabel Obadiaru) ஆகியோருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். அத்துடன், சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின், அணுசக்திப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி எலெனா பக்லொவாவை (Elena Buglova) சந்தித்ததுடன், பூட்டான் தேசியப் பேரவையின் செயலாளர் நாயகம் திரு டுபாவுடன் (Mr. Duba) இரு தரப்பு சந்திப்பிலும் இலங்கைப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

“அமைதியான மற்றும் நிலைபேறான எதிர்காலத்திற்கு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தை (STI) பயன்படுத்துதல்” எனும் தொனிப்பொருளில் பொது விவாதம் இடம்பெற்றது. இது கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், அழுத்தமான உலகளாவிய பிரச்சினைகள் தொடர்பில் விவாதிப்பதற்கும், நிலையான வளர்ச்சியை நோக்கிய பாராளுமன்ற நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும் ஒரு முக்கிய தளத்தைப் பிரதிநிதிகளுக்கு வழங்கியது.

இந்தப் பேரவையில் இலங்கைப் பிரதிநிதிகளின் பங்கேற்பானது, சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், பகிரப்பட்ட சவால்களைச் சட்டமன்ற உரையாடல் மூலம் எதிர்கொள்வதற்கும் இந்நாட்டின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

ඊ-මේල් මගින් පිලිතුරු දෙන්න එය පිට

කරුණාකර ඔබගේ අදහස් ඇතුළත් කරන්න.
කරුණාකර ඔබගේ නම ඇතුලත් කරන්න