• பாராளுமன்றத்தில் காணப்படும் 80ற்கும் அதிகமான குழுக்கள் மற்றும் ஒன்றியங்கள் பாரிய பங்காற்றப்படுகின்றது – சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர்

தலைமைத்துவத்தை நோக்கிப் பெண்கள் பயணிக்கும்போது எதிர்கொள்ளும் சவால்களை முறியடிக்க அறிவு, திறமை மற்றும் தன்னம்பிக்கை என்பவற்றைத் தொடர்ந்தும் வளர்ப்பதன் ஊடாக தடைகளைத் தாண்டி முன்னோக்கிச் செல்ல முடியும் என கொலன்னாவ மகளிர் கல்லூரி மாணவிகள் மத்தியில் உரையாற்றிய பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

கொலன்னாவ மகளிர் கல்லூரி மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

உலகில் முதல் பெண் பிரதமர் இலங்கையில் உருவாகியிருந்தாலும், பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்னும் 5% ஐ விட அதிகரிக்காத பின்னணியில், பெண்களின் தலைமைத்துவம் மற்றும் பிரதிநிதித்துவம் மேலும் விருத்தியடைய வேண்டும் என செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். எனினும், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்கள் உள்ளிட்ட பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் இந்நாட்டின் பெண்களை வலுப்படுத்தும் வகையிலும் அவர்களின் உரிமைகளுக்காகவும் பாரிய பணியொன்று மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். அதற்கமைய, கடந்த காலங்களில் பெண்கள் தொடர்பான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும் சட்டங்களைத் திருத்துவதற்கும் முடிந்ததாக செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றம் பொதுமக்களிடமிருந்து தூரமாகியிருந்த கடந்த காலங்களில் இலங்கை பாராளுமன்றத்தினால் 200 கும் மேற்பட்ட மாணவ பாராளுமன்றங்களை தொடர்புகொண்டு அறிவுறுத்தும் நிகழ்வுகளை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், பாராளுமன்றக் குழுக்களில் இளைஞர் பிரதிநிதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்குதல் உள்ளிட்ட நேர்மறையான பல நடவடிக்கைகளை எடுக்க முடிந்ததாகவும் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமான எம் ஜயலத் பெரேரா குறிப்பிடுகையில், பாராளுமன்றக் குழுக்களினால் திரைக்குப் பின்னால் பாரிய பணி மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார். ஒன்பதாவது பாராளுமன்றத்தில் சுமார் 70 குழுக்கள் செயற்பட்டதாகவும், 12 ஒன்றியங்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ‘தேசிய பேரவை’ உடன் இந்தத் தொகை 83 ஆகும் என அவர் தெரிவித்தார். அத்துடன், இந்தக் குழுக்கள் மற்றும் அவற்றின் பணிகள் தொடர்பில் மாணவர்களுக்குத் தெளிவூட்டல் வழங்கப்பட்டது.

அத்துடன், மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகள் மற்றும் ஆளுமை விருத்தி என்பவற்றுக்கு மாணவ பாராளுமன்றம் முக்கியமானது எனவும் ஜயலத் பெரேரா அவர்கள் மேலும் தெரிவித்தார்.

கொலன்னாவ மகளிர் கல்லூரி மாணவ பாராளுமன்றத்தின் அங்கத்தவர்கள் பாராளுமன்ற பொதுமக்கள் களரி உள்ளிட்ட முக்கியமான இடங்களையும் இதன்போது பார்வையிட்டனர்.

பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுக்கள் சேவைகள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட இந்த நிகழ்வில் கொலன்னாவ மகளிர் கல்லூரி உதவி அதிபர் ஆர்.ஏ.எஸ். மதுபாஷிணி, பகுதித் தலைவர் டி.எம். தமராகாந்தி திசாநாயக்க, மாணவ பாராளுமன்றத்துக்குப் பொறுப்பான ஆசிரியர் நிசன்சலா அனுருத்தி கல்மன்கொட உள்ளிட்ட ஆசிரியர்களும், பாராளுமன்ற பொதுக்கள் சேவைகள் பிரிவின் முகாமையாளர் புத்தினி ராமநாயக்க உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

ඊ-මේල් මගින් පිලිතුරු දෙන්න එය පිට

කරුණාකර ඔබගේ අදහස් ඇතුළත් කරන්න.
කරුණාකර ඔබගේ නම ඇතුලත් කරන්න