ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் (House Democracy Partnership) உறுப்பினர்களான ஜமேக்காவின் முன்னாள் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் கௌரவ கலாநிதி பீட்டர் பிலிப்ஸ், கென்யாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எந்திரிது முரிய்தி மற்றும் காங்கிரஸ் வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் கிறிஸ்டி ஹவ்லி அந்தனி ஆகியோர் அண்மையில் (01) இலங்கை பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்தனர்.
இதன்போது அவர்கள் பாராளுமன்ற பணியாட்தொகுதியின் தலைவரும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன மற்றும் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகியோருடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், பொதுக் கடன் முகாமைத்துவம் தொடர்பில் இலங்கை பாராளுமன்றத்தின் பணியாளர்களுக்கு தூதுக்குழுவின் வளப் பங்களிப்பில் மேற்கொள்ளப்பட்ட மூன்று நாள் செயலமர்வு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், பாராளுமன்ற முறைமை மற்றும் சட்டவாக்க முறை, பாராளுமன்ற குழு முறைமை, பெண்களின் பிரதிநிதித்துவம், பாராளுமன்றத்தின் பொதுமக்கள் வெளிக்கள செயற்பாடுகள் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.