பொருளாதார நிலைமாற்ற சட்டமூலம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பாராளுமன்றத்தில் கலந்துரையாடல்

ஜூலை 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள பொருளாதார நிலைமாற்ற சட்டமூலம் தொடர்பான விசுட கலந்துரையாடல் அண்மையில் (22) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு சமாந்தரமாக முன்வைக்கப்படும் இந்தச் சட்டமூலம் இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகக் கொண்டுவரப்படும் ஒன்றாகும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ் சமரதுங்க இங்கு தெரிவித்தார். பொருளாதார மாற்றத்திற்கான தேசிய கொள்கையை இச்சட்டமூலம் வழங்குகின்றது. இலங்கை பொருளாதார ஆணைக்குழு, முதலீட்டு வலயங்கள், சர்வதேச வர்த்தகத்திற்கான அலுவலகம், தேசிய உற்பத்தி ஆணைக்குழு மற்றும் இலங்கை பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தக நிறுவனம் ஆகியவற்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை இது வழங்குகின்றது. மேலும், புதிய சட்டம் 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தை நீக்குவதற்கும் வழிவகுப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்த சட்டமூலம் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தனர். பொருளாதார மாற்றத்தை சரியான திசையில் வழிநடத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக இந்த மசோதாவை அறிமுகப்படுத்த முடியும் என்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர். அத்துடன், பொருளாதார ஆணைக்குழுவிற்கு ஆட்களை நியமிக்கும் நிதி அமைச்சரின் அதிகாரக் குவிப்பைக் குறைப்பதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினரின் மேலதிக கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்று, ஆட்களை நியமிக்கும் போது உள்ளூர் அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த தகுதிபெற்ற பொருத்தமானவர்களை நியமிக்க அதிக இடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், தற்போதுள்ள காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவுளும் இங்கு முன்வைக்கப்பட்டன.

இங்கு உரையாற்றிய குழுவின் தலைவர், பொருளாதாரத்தை புதிய திசையில் வழிநடத்தும் முக்கியமான சட்டமூலமாக இது காணப்படுகின்றபோதும், இங்கு கலந்துரையாடப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் யோசனைகளையும் இதில் இணைத்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும் என்றார். அந்த விடயங்கள் அனைத்தையும் சட்டத்தில் சேர்க்க முடியாவிட்டாலும், அவை துணைச் சட்டங்களாக (ஒழுங்குவிதிகள்/கட்டளைகள்) அமுல்படுத்தப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்தமைக்காகவும், கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்க நிதி பற்றிய குழு வெஸ்மின்ஸ்டர் மன்றத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தக் கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள், வெரிட்டே ரிசேர்ச், அட்வகாட்டா, ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நஷனல், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உள்ளிட்ட நிறுவனங்கள் சிலவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

ඊ-මේල් මගින් පිලිතුරු දෙන්න එය පිට

කරුණාකර ඔබගේ අදහස් ඇතුළත් කරන්න.
කරුණාකර ඔබගේ නම ඇතුලත් කරන්න