QR குறியீட்டின் அடிப்படையில் மீள்சுழற்சிக்காக PET பிளாஸ்டிக் போத்தல்களைச் சேகரிக்கும் செயற்பாடு குறித்து சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்
- ஒவ்வொரு வருடமும் 450,000 டொன் பிளாஸ்டிக் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றபோதும் 50,000 டொன் பிளாஸ்டிக்கு மீள் சுழற்சிக்காக சேகரிக்கப்படுகின்றன – துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர்
QR குறியீட்டின் அடிப்படையில் மீள்சுழற்சிக்காக PET பிளாஸ்டிக் போத்தல்களைச் சேகரிக்கும் செயற்பாடு குறித்து சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் (12) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் மான்னப்பெரும தலைமையில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் நாட்டுக்குள் 450,000 டொன் பிளாஸ்டிக் இறக்குமதி செய்யப்படுவதாகவும், இதில் 50,000 டொன் மாத்திரமே மீள்சுழற்சிக்காகச் சேகரிக்கப்படுவதாகவும் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் மான்னப்பெரும தெரிவித்தார். PET பிளாஸ்டிக் போத்தல்கள் குறித்து நேரடியான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்டில் மாதத்திற்கு சுமார் 1200 டொன் PET பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டாலும், அதில் 400 டொன் மாத்திரமே மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுவதாகவும், மீதமுள்ள 900 டொன் முறையற்ற முறையில் சுற்றுச்சூழலில் களிக்கப்படுவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இவ்வாறு களிக்கப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள் ஆறுகள் மற்றும் கால்வாய்கள் போன்றவற்றில் கலப்பதுடன், சில திறந்த வெளியில் எரியூட்டப்படுவதுடன், சில நிலத்தில் புதைக்கப்படுவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. போத்தலொன்றுக்குப் போதியளவு பணம் வழங்கப்படாமையால் இந்தப் போத்தல்களைச் சேகரிப்பதில் பொதுமக்கள் அதிகம் அக்கறை காண்பிப்பதில்லையென்பதும் இங்கு தெரியவந்தது.
இவ்வாறான நிலையில் பிளாஸ்டிக் போத்தல்களை QR குறியீட்டின் அடிப்படையில் மீள்சுளற்சிக்காக சேகரிக்கும்போது வைப்புத்தொகையை மீளஅளிக்கும் முறையொன்று தொடர்பில் தொழில்நுட்ப மற்றும் நிதி அடிப்படையிலான திட்டங்களை ஜூலை 18ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு தொழில்துறையில் உள்ளவர்களிடம் கோரி பத்திரிகைகளில் விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. எனினும், இதற்காக வழங்கப்பட்ட காலஅவகாசம் போதுமானது இல்லையென தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் குழுவில் சுட்டிக்காட்டினர். இதற்கமைய திட்டங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால எல்லையை நீடிக்குமாறு குழுவில் ஆஜராகியிருந்த தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பில் நீண்ட கலந்துரையாடலை நடத்திய மேற்பார்வைக் குழு திட்டங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால எல்லையை ஓகஸ்ட் 27ஆம் திகதி வரை நீடிக்குமாறும் பரிந்துரைத்தது.
அத்துடன், இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் குழு சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜயந்த சமரவீர மற்றும் கௌரவ (வைத்தியகலாநிதி) திலக் ராஜபக்ஷ ஆகியோர் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.