தெஹிவளை கல்கிஸ்ஸை கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்களுக்கு நிதியளித்து வைப்பாளர்களின் பணத்தை மீளப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் வங்கித்தொழில் மற்றும் நிதிச்சேவைகள் பற்றிய குழுவின் கவனத்திற்கு
தெஹிவளை கல்கிஸ்ஸை கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்களுக்கு நிதியளித்து வைப்பாளர்களின் பணத்தை மீளப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் வங்கித்தொழில் மற்றும் நிதிச்சேவைகள் பற்றிய குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.
வங்கித்தொழில் மற்றும் நிதிச்சேவைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி லொக்குகே தலைமையில் அண்மையில் (12) பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பில் இந்தக் குழு பல்வேறு சந்தர்ப்பங்களில் கலந்துரையாடியிருந்ததுடன், அந்தக் கலந்துரையாடல்களில் இந்நாட்டின் பொருளாதார நெருக்கடியின் தாக்கம், கூட்டுறவுச் சங்கங்களின் ஊழல் மற்றும் மோசடிகள், அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தொலைநோக்கற்ற தீர்மானங்கள் மற்றும் சரியான நேரத்தில் கணக்குகளை கணக்காய்வு செய்யாமை போன்ற 4 விடயங்கள் தொடர்பில் பிரதானமாகக் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள், ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு சட்டத்துக்கு விரோதமான வகையில் கடன் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர். அதனால், அதனுடன் தொடர்புபட்ட இரண்டு அதிகாரிகளை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர். விசேடமாக, தெஹிவளை கல்கிஸ்ஸை கூட்டுறவுச் சங்கத்துக்கு மாத்திரம் சம்பந்தப்பட்ட வகையில், ஒரு நபருக்கு 400க்கும் மேற்பட்ட துரித கடன் வழங்கப்பட்டுள்ளது அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இது தொடர்பான விசாரணைகளை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு குழு சுட்டிக்காட்டியது. அதனால், இது தொடர்பில் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்துடன் கலந்துரையாடி, விசாரணைகள் தொடர்பான தகவல்களை இற்றைப்படுத்துமாறும் அதிகாரிகளுக்குக் குழுவினால் ஆலோசனை வழங்கப்பட்டது.
அத்துடன், தெஹிவளை கல்கிஸ்ஸை கூட்டுறவுச் சங்கத்தை பராமரிப்பதற்கு அதாவது சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட மாதாந்த செலவுகள் தொடர்பான அறிக்கை ஒன்றை குழுவுக்கு வழங்குமாறும் பரிந்துரை வழங்கப்பட்டது.
அத்துடன், தீர்வொன்று இல்லாமல் இருந்த கூட்டுறவுத் துறையில் காணப்படும் நெருக்கடியான நிலைமையை தீர்க்கும் வகையில் பிரயோக ரீதியான வழங்குவதற்கு வங்கித்தொழில் மற்றும் நிதிச்சேவைகள் பற்றிய குழு மேற்கொள்ளும் தலையீடு தொடர்பில் கலந்துகொண்டவர்கள் குழுவுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ உதய கம்மன்பில மற்றும் கௌரவ கருணாதாஸ கொடிதுவக்கு ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், மேல்மாகாண சபை, கொழும்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.