உள்ளக நீர்வழிகள் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நிறுவனத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கவனத்திற்கு

  • காலனித்துவத்திற்கு முன்னர் இந்த நாட்டில் இருந்த விருத்தியான நீர் போக்குவரத்து அமைப்பு செயல்படாதது குறித்து அதிகாரிகளிடம் குழு வினவல்

உள்ளக நீர்வழிகள் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நிறுவனத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாலக பண்டார கோட்டேகொட தலைமையில் அண்மையில் (09) பாராளுமன்றத்தில் கூடிய போதே இன் விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மதுர விதானகே குழுவுக்கு முன்வைத்த பிரேரணைக்கு அமைய இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. நீண்ட காலமாக நீர்வழிகள் மூலம் போக்குவரத்து மேற்கொள்வது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டு வந்தாலும், இதற்காக முறைமையொன்று தயாரிக்கப்படவில்லை என குழு சுட்டிக்காட்டியது. அத்துடன், இலங்கை ஒரு தீவு என்பதாலும், கொழுப்பு நகரத்தை அண்டிய பகுதியில் அதிகாலையில் அலுவலக சேவைகள் ஆரம்பிக்கும் காலப்பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை குறைப்பதற்காக நீர்வழிகள் மூலம் போக்குவரத்தை ஊக்கப்படுத்த முடியும் எனவும் குழு சுட்டிக்காட்டியது.

மேலும், காலனித்துவத்திற்கு முன்னர் இந்த நாட்டில் இருந்த விருத்தியான நீர் போக்குவரத்து அமைப்பு தற்பொழுது செயற்படாமை குறித்து அதிகாரிகளிடம் குழு வினவியதுடன், இதற்குப் பொருத்தமான முறைமையொன்றை தயாரிப்பது முக்கியமானது என குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாலக பண்டார கோட்டேகொட சுட்டிக்காட்டினார். அதனால்  உள்ளக நீர்வழிகள் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நிறுவனத்தை ஸ்தாபிப்பது முக்கியமானது எனவும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அத்துடன், ஒரு மாதத்துக்குள் இது தொடர்பான முன்னேற்றத்தை குழுவுக்கு அறிவிக்குமாறும் குழுவின் தலைவர் அறிவுறுத்தல் வழங்கினார்.

மேலும், இலங்கையின் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் பின்தங்கிய நிலையை தவிர்ப்பதற்கான கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள்” மற்றும் “இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பு தொடர்பான கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள்” என்பவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக பிரசுரிக்கப்பட்ட பத்திரிகை அறிவித்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள எழுத்துமூலமான சமர்ப்பணங்கள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண, குழுவின் உறுப்பினர்களான கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ உதயகாந்த குணதிலக, கௌரவ யதாமினி குணவர்தன மற்றும் கௌரவ (சட்டத்தரணி) மதுர விதானகே ஆகியோரும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

ඊ-මේල් මගින් පිලිතුරු දෙන්න එය පිට

කරුණාකර ඔබගේ අදහස් ඇතුළත් කරන්න.
කරුණාකර ඔබගේ නම ඇතුලත් කරන්න