காணியின் உரிமையும் எழுத்துமூல அனுமதியின்றியும் காணியை பிரித்து ஏலத்தில் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கவும் – மேல் மாகாண உள்ளூராட்சி மன்றங்களுக்கு கோபா குழு பரிந்துரை

  • காணி மற்றும் வீடுகளை மோசடியாக விற்பனை செய்வதன் மூலம் நுகர்வோர் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு முறைமையொன்றைச் செயற்படுத்தவும் – கோபா குழுவின் தலைவர்

பெரும்பாலான ஏல விற்பனையாளர்களால் விற்பனை செய்யப்படும் காணிகள் மற்றும் வீடுகள் அவர்களால் வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ளமை மற்றும் அவர்கள் அது தொடர்பில் பொதுமக்களை அறிவுறுத்தாமை காரணமாக அவ்வாறான காணிகள் மற்றும் வீடுகளை கொள்வனவு செய்யும் நுகர்வோர் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதால் மேல் மாகாண உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள் அதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

உரிய அனுமதியைப் பெற்றுக்கொள்ள முன்னரே ஏல விற்பனை அறிவித்தலை வெளியிடுவதாக இங்கு கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர். முறையாக செயற்படும் ஏல விற்பனையாளர்களுடனும் கலந்துரையாடி நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் ஒரு பொறிமுறையைத் தயாரிக்குமாறு கோபா குழு பரிந்துரை வழங்கியது.

அதற்கமைய, முன் அனுமதி மற்றும் காணியின் உரிமை ஏல விற்பனையாளரால் உறுதிப்படுத்தப்படாமல் காணியை விற்பனை செய்வது அல்லது அது தொடர்பான அறிவித்தலை வெளியிடுவது தொடர்பில் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் சட்டரீதியான ஏற்பாடுகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது. அதற்கமைய, இது தொடர்பான முழுமையான அறிக்கையொன்றை ஆகஸ்ட் மாதத்துக்குள் குழுவுக்கு வழங்குமாறு அதிகாரிகளுக்குக் குழு அறிவுறுத்தல் வழங்கியது.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இதற்கு முன்னர் இடம்பெற்ற குழுக் கூட்டத்தில் மேல் மாகாண உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் வழங்கிய பரிந்துரைகளின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்கு இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் அண்மையில் (10) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

காணிகளை பிரித்து விற்பனை செய்யும் போது, பொது விடயங்களுக்கு ஒதுக்கும் காணிகள் தொடர்பான தற்போதைய நிலவரம் தொடர்பில் கணக்கெடுப்பு அறிக்கை வழங்குவதற்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு குழுவினால் பரிந்துரை வழங்கப்பட்டிருந்த போதிலும், அது தொடர்பான முன்னேற்ற அறிக்கை கணக்காய்வாளருக்கு இதுவரை கிடைக்கப்பெறாமை தொடர்பிலும் குழுவினால் வினவப்பட்டது.

அத்துடன், மேல் மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் ஒருங்கினைப்புத் தரவுக் கட்டமைப்பு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மேல் மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் ஒருங்கினைப்புத் தரவுக் கட்டமைப்பு மூலம் நிறுவன ரீதியாகவும் நிறுவனங்களுக்கிடையிலும் வினைத்திறனான வகையில் பணிகளை மேற்கொள்ள முடியுமென்பதால் இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு கோபா குழு அறிவுறுத்தல் வழங்கியது.

புதிய நகரசபை கட்டட நிர்மாண வேலைத்திட்டத்தின் ஆலோசனை சேவை வழங்குவதற்கு 2015 இல் 36 மில்லியன் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், காணி உரிமை நகர சபைக்கு இல்லாததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாகவும், அந்த ஆலோசனை சேவை வழங்கிய நிறுவனத்தினால் நிலுவைத் தொகை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை இங்கு புலப்பட்டது. உள்ளூராட்சி மன்றங்களால் தமது விருப்பத்துக்கு அமைய எந்தவொரு சாத்தியக்கூறு அறிக்கையும் இன்றி பொருத்தமற்ற செயற்திட்டங்களை முன்னெடுப்பதால் இவ்வாறான சிக்கல்கள் ஏற்படுவதாகவும், அதனால் கொள்கை ரீதியான தீர்மானமொன்று எடுக்கப்பட வேண்டும் எனவும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சஹன் பிரதீப் விதான, கௌரவ வீரசுமன வீரசிங்க, கௌரவ முதிதா பிரசாந்தி, கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ மஞ்சுளா திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

ඊ-මේල් මගින් පිලිතුරු දෙන්න එය පිට

කරුණාකර ඔබගේ අදහස් ඇතුළත් කරන්න.
කරුණාකර ඔබගේ නම ඇතුලත් කරන්න