அரசியல்வாதி என்பவர் நாட்டின் திசையை நேர்மறையான திசையில் செலுத்தக்கூடிய ஒரு நபர் என்றும், எதிர்காலத்தில் அத்தகைய அரசியல்வாதியாக உருவாகுவதற்கான உணர்வை வளர்த்துக் கொள்ளுமாறு கொலன்னாவ மகளிர் கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்பக் கூட்டத்தில் உரையாற்றிய கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் 2025.02.11 ஆம் திகதி இடம்பெற்ற கொலன்னாவ மகளிர் கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்பக் கூட்டத்தில் உரையாற்றிய போதே கௌரவ சபாநாயகர் இதனைத் தெரிவித்தார்.
அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் என்ற தவறான முன்னுதாரணம் காணப்பட்டதாகவும், இதை சரி செய்ய வேண்டும் என சபாநாயகர் தெரிவித்ததுடன், நாட்டின் சட்டவாக்கத்திற்கு நல்லவர்கள் வர வேண்டும் என்றும், அவ்வாறானவர்கள் இந்தப் பாடசாலை ஊடாக உருவாக வேண்டும் என அவர் தெரிவித்தார். அத்துடன், மக்களின் இதயங்களை வெல்லும் நபராக மாறுவதற்கு உறுதிபூண வேண்டும் என விசேட உரையாற்றிய சபாநாயர் மாணவர்களுக்கு சுட்டிக்காட்டினார்.
சட்டத்தை மதிக்கும் பிரஜைகளாக மாறுவதற்கு மாணவர்கள் உறுதிபூண வேண்டும் என இங்கு கலந்துகொண்டு உரையாற்றிய கௌரவ பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தெரிவித்தார். அத்துடன், எதிர்காலத் தேர்தலை நோக்கமாகக் கொண்ட சம்பிரதாய ரீதியான அரசியல்வாதி அல்லாமல் நாட்டின் எதிர்கால பரம்பரையை நோக்கமாகக் கொண்டு செயற்படும் ஒழுக்கமான தலைவர்களாக மாறுவதற்கு மாணவர்கள் உறுதிபூண வேண்டும் என்றும் பிரதி சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனத்தீர, பாராளுமன்றத்தின் பணிகள் மற்றும் செயன்முறை தொடர்பில் அடிப்படை அறிமுகத்தை வழங்கியதுடன், பாராளுமன்ற வரலாற்றில் இம்முறை அதிக பெண் பிரதிநிதித்துவம் காணப்படுகின்றமை எதிர்கால பெண் தலைவர்களுக்கு மிகவும் நல்ல செய்தி என்று தெரிவித்தார். அத்துடன், உலகின் முதல் பெண் பிரதமராக பதவியேற்று, சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களுக்கு இலங்கையின் பெயரை உயர்த்த முடிந்ததாகவும், தற்போதைய பிரதமரும் ஒரு பெண் என்பதால், பாலின வேறுபாடின்றி எதிர்காலத் தலைவர்களாக மாறும் ஆற்றலை இந்த மாணவிகள் கொண்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்துவதற்கு மாணவர் பாராளுமன்றம் ஒரு முக்கியமான தளம் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் கே.எம்.என். குமாரசிங்க, ‘Clean Sri Lanka’ திட்டம் குறித்து அடிப்படை விளக்கத்தை வழங்கியதுடன், ஒரு சிறந்த நாட்டை உருவாக்குவதில் சிறுவர்களின் பொறுப்பு குறித்து விரிவாக விளக்கினார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா கலந்துகொண்டதுடன், எதிர்காலத் தலைவர்களாகுவதற்கு மாணவர் பாராளுமன்றம் போன்ற திட்டங்கள் மிகவும் முக்கியமானவை என மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டார்.
இந்நாட்டின் பாராளுமன்றமாக பல தசாப்தங்கள் காணப்பட்ட வரலாற்று ரீதியான இந்த இடத்திலிருந்து மாணவர்கள் இந்த அனுபவத்தைப் பெறுவது மிகவும் பெறுமதி மிக்கது என கொலன்னாவ மகளிர் வித்தியாலய அதிபர் எஸ்.எச்.ஜே. பலகல்ல குறிப்பிட்டார்.
அதனையடுத்து, கொலன்னாவ மகளிர் வித்தியாலய மாணவர் பாராளுமன்ற அங்கத்தவர்கள் முதலாவது பாராளுமன்ற அமர்வை நடாத்தினர்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு கௌரவ சபாநாயகர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன
ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவை பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மாணவர் பாராளுமன்ற திட்டத்தின் ஒரு அங்கமாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவை பிரிவு முகாமையாளர் புத்தினீ ராமநாயக்க உள்ளிட்ட பல அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.























