இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் பிரதிநிதிகள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை நேற்றுமுன்தினம் (29) சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் தலைவர் ரசாஞ்சலி பத்திரகே ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இயலாமையுடைய நபர்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி குறித்த முன்னணியின் பிரதிநிதிகள் கௌரவ சபாநாயருக்கு விளக்கமளித்தனர். இலங்கையில் கொள்கைகள் வகுக்கப்படும்போது, இந்நாட்டில் கணிசமான சனத்தொகையைக் கொண்டுள்ள இயலாமையுடைய நபர்கள் இணைத்துக்கொள்ளப்படாமை குறித்து அவர்கள் சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டுவந்ததுடன், கொள்கை வகுப்பின் போது தமது பிரதிநிதித்துவம் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இயலாமையுடைய நபர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக சுயாதீன ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் கௌரவ சபாநாயகரிடம் எடுத்துக் கூறினர். இயலாமையுடைய நபர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்தல், கொள்கை உருவாக்கத்தின் போது அவர்களையும் உள்ளடக்குவது போன்ற விடயங்களுக்கு முறையான ஒருங்கிணைப்புத் திட்டத்தை வகுக்க வேண்டியதன் அவசியத்தையும், சைகை மொழியை தேசிய மொழியாக மாற்றுவதற்கான சட்டமூலத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர். அத்துடன், இந்நாட்டில் செவிப்புலன் குறைபாட்டைக் கொண்டவர்களில் அதிகமானவர்கள் பெண்களாக இருப்பதால், அவர்களின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தும் வகையிலான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் சபாநாயகரிடம் தெரிவித்தனர். இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தை விரைவில் அமைப்பதற்காக நடவடிக்கை எடுக்குமாறும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர், இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாகப் பார்வைக் குறைபாட்டைக் கொண்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சுகத் வசந்த த சில்வா அவர்கள்) பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டினார். இயலாமை உடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தை அமைப்பதற்கான முன்மொழிவை குறித்த பாராளுமன்ற உறுப்பினர் ஏற்கனவே பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், குறித்த ஒன்றியத்தைக் கூடிய விரைவில் அமைக்க முடியும் என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார். பல ஆண்டுகளாக இயலாமை உடைய நபர்களைப் பாதித்துவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இதன் மூலம் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார்.