• சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் அவர்களை ஊக்குவிப்பது குறித்தும் அவதானம்
இலங்கை மத்திய வங்கி சட்டத்தின் 26(5) பிரிவுக்கு அமைய மத்திய வங்கியின் நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள பணவீக்க இலக்கிலிருந்து விலகல் பற்றிய இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டது.
2024ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுக்கான நாணயக்கொள்கை கட்டமைப்புசார் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பணவீக்க இலக்கிலிருந்து முதன்மை பணவீக்கத்தின் விலகல் பற்றி அறிக்கை இலங்கை மத்திய வங்கியினால் சமர்ப்பிக்கப்பட்டது.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு கடந்த 23ஆம் திகதி கூடியபோதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 26(5) இற்கமைய, இலங்கை மத்திய வங்கியானது நாணயக் கொள்கைக் கட்டமைப்பு சார் உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள பணவீக்க இலக்கினைக் குறித்துரைக்கப்பட்ட இடைவெளியொன்றினுள் தொடர்ச்சியான இரண்டு காலாண்டுகளில் பூர்த்திசெய்யத் தவறினால் நாணயக் கொள்கைச் சபையானது நிதியமைச்சரினூடாகப் பாராளுமன்றத்திற்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கத் தேவைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அது பொதுமக்களுக்கு கிடைப்பனவாகவும் இருத்தல் வேண்டும்.
2023 ஒக்டோபர் 03ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையானது 5 சதவீதத்தை பணவீக்க இலக்காக விதித்துள்ளதுடன், இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 26(5) இன் நோக்கத்திற்காக இடைவெளியை ±2 சதவீதப் புள்ளிகளாகக் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினால் அளவிடப்பட்டவாறான காலாண்டு முதன்மைப் பணவீக்கமானது 2024இன் இரண்டாம் மற்றம் மூன்றாம் காலாண்டுகளாக உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டதைப் பார்க்க பணவீக்க இலக்கு குறைவாகவே இருந்தது. இது முறையே 1.4 சதவீதமெனவும் 0.8 சதவீதமொனவும் பதிவுசெய்யப்பட்டிருப்பதால் மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 26(5) இன் கீழ் தேவைப்படுத்தப்பட்ட அறிக்கையானது நிதியமைச்சரினூடாகப் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பாக மத்திய வங்கி அதிகாரிகள் விரிவான விளக்கங்களை குழு முன்னிலையில் வழங்கியதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் விளக்கமான பதில்களை வழங்கினர். இதற்கு அமைய பணவீக்க இலக்கிலிருந்து விலகியமைக்கான பிரதான காரணிகள் குறித்து மத்திய வங்கியின் ஆளுனர் இங்கு விளக்கமளித்ததுடன், மின்சாரணக் கட்டணம், உள்நாட்டு எரிபொருள் விலைகள், உணவு விலை, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமை, தனியார் துறையின் கடன் விரிவாக்கம், வங்கி வட்டிவீதம், நிதிக் கட்டமைப்புக்களின் ஊடாக நிதிக் கொள்கை பரிமாற்றத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பில் சுட்டிக்காட்டினார். மேலும், இலங்கை 5சதவீத பணவீக்க இலக்கை சரியான முறையில் பேணிச்செல்லவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், நிதிக் கொள்கை குறித்து சரியான கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கான நிவாரணம் வழங்கல் மற்றும் அவற்றை வலுப்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, மத்திய வங்கியினால் வழங்கப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மறுசீரமைக்கப்பட்ட கடன்களில் 20 மில்லியன் ரூபாவை விடக் குறைந்த நிலுவை மூலதனத்தைக் கொண்ட கடனாளிகளில் 99% ற்கு வங்கிகளுடன் மீண்டும் கலந்துரையாடி கொடுக்கலவாங்கலைத் தீர்ப்பதற்கு 12 மாதகால நீடிப்பை வழங்குதல் மற்றும் 25,000,000 ரூபாவுக்கும், 50,000,000 ரூபாவுக்கும் இடைப்பட்ட தொகையைக் கடனாகப் பெற்ற கடனாளிகளுக்கு 9 மாதகால நீடிப்பை வழங்குதல், ஏனைய சகல கடனாளிகளுக்கும் 6 மாதகால நீடிப்பை வழங்குதல் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள மத்திய வங்கியின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிவாரணப் பொதிக்கு கடன் தரப்படுத்தலை இலகுபடுத்தல், மீளச் செலுத்துவதற்கான காலத்தை நீடித்தல், மறுசீரமைக்கப்பட்ட கடன்களுக்காக குறைந்த வட்டிவீதத்தைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் மதிப்பீடுகளில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளிப்படையான வழிமுறைகளைப் பின்பற்றுதல் போன்ற விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மத்திய வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள், ஒவ்வொரு துறையாகக் கவனத்தில் எடுத்து அவற்றுக்கு நிவாரணம் வழங்குவது கடினம் எனச் சுட்டிக்காட்டினர். அத்துடன், பிராந்தியத்தில் காணப்படும் ஏனைய நாடுகள் பேணிவரும் பணவீக்க விகிதம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. காலாண்டுக்கு ஒருமுறை இதுபோன்ற கலந்துரையாடல்களை நடத்துவதன் அவசியத்தைக் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
இந்தக் குழுக் கூட்டத்தில் குழு உறுப்பினர்களான கௌரவ பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன, அர்கம் இலியாஸ், நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக, திலின சமரக்கோன், (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கலந்துகொண்டனர். குழுவின் தலைவருடைய அனுமதியுடன் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் சஜீவ சேனசிங்க ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.