- இரண்டு பாராளுமன்ற ஒன்றியங்களை பத்தாவது பாராளுமன்றத்தில் மீண்டும் ஸ்தாபிப்பது தொடர்பிலும் சபாநாயகர் சபையில் அறிவிப்பு
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக மூன்று உறுப்பினர்களின் பெயர்களையும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக நான்கு உறுப்பினர்களின் பெயர்களையும் கௌரவ சபாநாயகர் (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்ன இன்று (07) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கமைய, பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (பேராசிரியர்) அனில் ஜயந்த, கௌரவ கமகெதர திசாநாயக்க மற்றும் கௌரவ கயான் ஜனக ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அத்துடன், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 121 இன் ஏற்பாடுகளுக்கமையவும் 2024 டிசம்பர் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கமைய அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக கௌரவ சதுரங்க அபேசிங்ஹ, கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், கௌரவ (கலாநிதி) கெளஷல்யா ஆரியரத்ன மற்றும் கௌரவ அர்கம் இல்யாஸ் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
அத்துடன், இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியம் என்பவற்றை பத்தாவது பாராளுமன்றத்தில் மீண்டும் ஸ்தாபிப்பது தொடர்பான பிரேரணைக்கு 2024 டிசம்பர் 31 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்ததாகவும் சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.