பாராளுமன்றம் எதிர்வரும் டிசம்பர் 17ஆம், 18ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கௌரவ சபாநாயகர் தலைமையில் அண்மையில் (6) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
டிசம்பர் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 2.00 மணிவரை பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான ஒதுக்கீடுகளை மேற்கொள்வது தொடர்பான குறைநிரப்பு தொகை மதிப்பீடு மற்றும் 2024 வீதி அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான ஒதுக்கீடுகளை மேற்கொள்ளும் குறைநிரப்புத் தொகை மதிப்பீடு தொடர்பான விவாதத்தை நடத்தி, குறித்த விவாதத்தை 2024.12.18ஆம் திகதி மீண்டும் ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இதன் பின்னர் பி.ப. 2.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சர்வதேச இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைப்பது தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை (எதிர்க்கட்சி) தொடர்பான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 18ஆம் திகதி புதன்கிழமை, மு.ப. 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. விவாதத்தின் பின்னர் இவை சபையில் நிறைவேற்றப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான இரண்டு கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.