பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கலாநிதி அசோக ரன்வல அவர்கள் தெரிவு
- பிரதிச் சபாநாயகர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வைத்தியகலாநிதி ரிஸ்வி சாலி தெரிவு
- குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹேமாலி வீரசேகர தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். பிரதமர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களினால் அசோக ரன்வலவின் பெயர் முன்மொழியப்பட்டதுடன், அமைச்சர் கௌரவ விஜத ஹேரத் அதனை வழிமொழிந்தார்.
இதனைத் தொடர்ந்து சபாநாயகரின் பெயரை முன்மொழிந்த பிரதமர் மற்றும் வழிமொழிந்த அமைச்சர் ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக புதிய சபாநாயகரை அக்கிராசனத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து சபாநாயகரின் பதவிச்சத்தியமும், பின்னர் சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியமும் இடம்பெற்றது.
புதிய சபாநாயகர் தெரிவுசெய்யப்பட்டமை தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் ஆகியோர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
சபாநாயகர் பதவிக்குத் தன்னைத் தெரிவுசெய்தமை குறித்து நன்றி தெரிவித்த அவர் குறிப்பிடுகையில், நாட்டின் அதியுயர் ஸ்தாபனம் என்ற ரீதியில் பாராளுமன்றம் தனது சுதந்திரத்தையும் கௌரவத்தையும் பாதுகாப்பதற்குத் தேவையான கருமங்களை ஆற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகச் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தின் மரபுகள் மற்றும் நடைமுறைகளின்படி, முன்னுதாரணமான பாராளுமன்றத்தை உருவாக்குதற்குத் தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றும், இதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியல் கலாசாரத்துடன் கூடிய பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை மிகவும் திறம்பட அமுல்படுத்துவதற்கு தன்னை அர்ப்பணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றக் குழுப் பொறிமுறையை மேலும் முறைப்படுத்துவதற்கு அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த சபாநாயகர், பாராளுமன்ற விவகாரங்களில் முன்மாதிரியாகவும் ஒழுக்கமாகவும் பங்களிக்குமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்ட அசோக ரன்வல அவர்கள், கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை கம்பஹா மாவட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் பியகம யதிஹேன ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், கம்பஹா ஹேனேகம மத்திய கல்லூரியில் உயர் கல்வியையும் பெற்றுக்கொண்டார். மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியல் பட்டதாரியான சபாநாயகர், ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் உயிரியல் இரசாயன கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். பியகம பிரதேச சபை மற்றும் மேல் மாகாண சபையின் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டு மக்கள் பணியை ஆரம்பித்திருந்தார்.
அத்துடன், பாராளுமன்றத்தின் பிரதிச் சபாநாயகர் பதவிக்கு கௌரவ வைத்தியகலாநிதி மொஹொமட் ரிஸ்வ சாலி அவர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவருடைய பெயரை ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் கௌரவ வைத்தியகலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ முன்மொழிந்ததுடன் அமைச்சர் கௌரவ சரோஜா போல்ராஜ் அதனை வழிமொழிந்தார்.
வைத்தியகலாநிதி ரிஸ்வி சாலி அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினராகும். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வைத்தியத்துறையில் சேவையாற்றிவரும் இவர், 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவிக்கு கௌரவ ஹேமாலி வீரசேகர ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். அவரது பெயரை அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சமன்மலி குணசிங்க அதனை வழிமொழிந்தார். கௌரவ ஹேமாலி வீரசேகர தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி கம்பஹா மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டார். இவர் கொழும்பு யசோதரா மகளிர் கல்லூரி மற்றும் தேவிபாளிகா கல்லூரி ஆகியவற்றில் பாடசாலைக் கல்வியைப் பெற்றதுடன், மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப அதிகாரியாக தொழில் ரீதியாக பணியாற்றியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத்தின் மகளிர் நிறைவேற்று உறுப்பினராகவும் கடமையாற்றி இவர், முன்னாள மஹர பிரதேச சபையின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.