அவுஸ்திரேலியாவின் சிட்டி நகரில் கடந்த நவம்பர் 03ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரை நடைபெற்ற 67வது பொதுநலவாய பாராளுமன்ற மாநாட்டில் பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் இலங்கைக் கிளை பங்கேற்றது. இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகமும், பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் ஆசிய பிராந்தியத்தின் பிராந்திய செயலாளருமான குஷானி ரோஹனதீர கலந்துகொண்ட இந்தப் பெருமைக்குரிய மாநாட்டில், பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த 700ற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற பணியாளர்கள் மற்றும் தீர்மானம் எடுக்கக் கூடிய நபர்கள் கலந்துகொண்டனர்.
இந்த வருட பொதுநலவாய பாராளுமன்ற மாநாட்டை நியூ சவுத் வேல்ஸ் பாராளுமன்றம் மற்றும் பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் நியூ சவுத் வேல்ஸ் கிளை என்பன இணைந்து நடத்தியிருந்ததுடன், பொதுநலவாய பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும் எண்ணிக்கையானவர்கள் ஒன்று கூடிய நிகழ்வாகவும் இது அமைந்தது. இந்த மாநாட்டில் சபாநாயகர்கள், பாராளுமன்றத்திற்குத் தலைமைதாங்கும் அதிகாரிகள், பொதுநலவாய அமைப்பில் உள்ள தேசிய, மாநில, மாகாண மற்றும் பிராந்திய சட்டமன்றங்களில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடியிருந்ததுடன், இது பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் நோக்கத்தை ஏறத்தாழ 180 பாராளுமன்றங்கள் மற்றும் சட்டமன்றங்களுக்கு மேலோங்கச் செய்கின்றது.
பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவின் தலைவர் பதவிக்கான தேர்தல் முறைமையை மேற்பார்வையிடும் கண்காணிப்பாளராக செயற்படுமாறு லண்டனில் உள்ள பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் தலைமையகம் இலங்கைப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவிடம் கோரிக்கை விடுத்தது. இரண்டு கண்காணிப்பாளர்களில் ஒருவர் என்ற ரீதியில் தேர்தல் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்தப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவின் தலைவர் பதவிக்கான இரகசிய வாக்கெடுப்பை இவர் கண்காணித்தார்.
அத்துடன், பிராந்திய செயலாளர்கள் சந்திப்பிலும் கலந்துகொண்ட குஷானி ரோஹனதீர அவர்கள், லண்டனில் உள்ள பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்டீபன் ட்டுவிக் உள்ளிட்ட பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். அதேநேரம், பொதுநலவாய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் 8வது மாநாடு, பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் பொதுக் கூட்டம் மற்றும் செயலாளர் நாயகங்களின் சங்கத்தின் 58வது கூட்டத்திலும் இவர் பங்கெடுத்திருந்தார்.
மேலும், இலங்கையில் முன்னெடுக்கப்படவிருக்கும் தரநிறையாக்க மதிப்பீடு முயற்சி குறித்து பொதுநலவாய பாராளுமன்ற சங்கத் தலைமையத்தின் செயலாளர் ஜக் ஹாட்காசில் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அத்துடன், 10வது பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்காக 2025 மே மாதத்தில் முன்னெடுக்கப்படவுள்ள ஒருமுகப்படுத்தல் திட்டம் சம்பந்தமாக பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் பிரித்தானியா கிளையைச் சார்ந்த ஜோஷ் டார்க் என்பவருடனும் இவர் கலந்துரையாடியிருந்தார்.
அதன் செயலூக்கமான பங்கேற்பு மற்றும் தலைமைத்துவப் பாத்திரத்தின் மூலம், CPA இலங்கைக் கிளையானது, பாராளுமன்ற ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், நிர்வாகத் தரங்களை வலுப்படுத்துவதற்கும், பொதுநலவாய ஒற்றுமையை ஊக்குவிப்பதற்கும் இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.