ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சமூகவிஞ்ஞானத்துறை பட்டதாரி மாணவர்களுக்காகப் பாராளுமன்ற முறைமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட செயலமர்வு பதில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தலைமையில் அண்மையில் (04) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்த செயலமர்வில் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான ஜயலத் பெரேரா, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சமூகவிஞ்ஞானத்துறையின் சிரேஷ்ட பேராசிரியர் மயூர சமரக்கோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இங்கு பாராளுமன்றம் மற்றும் சட்டவாக்கத்தின் செயற்பாடுகள் குறித்து பட்டதாரி மாணவர்களைத் தெளிவுபடுத்திய பதில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன பிரதான உரை நிகழ்த்தியதுடன், பல்கலைக்கழக மாணவர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பதில் வழங்கப்பட்டது.
இச்செயலமர்வின் இறுதியில் கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட பேராசிரியர் மயூர சமரகோன், இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இதுபோன்று பயனுள்ள செயலமர்வை ஏற்பாடு செய்தமைக்காகத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நடத்தும் குறுகிய பாடநெறிகளில் பங்குகொள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகமும் ஆர்வமாக உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
விழிப்புணர்வூட்டும் செயலமர்வைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாராளுமன்ற சுற்றுப்பயணமும் இடம்பெற்றதுடன், இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.