ஒன்பதாவது பாராளுமன்றத்தின் காலம் 2020 ஆகஸ்ட் 20 ஆம் திகதி கூடியது முதல் கலைக்கப்பட்ட நாள் வரை 4 ஆண்டுகளும் 1 மாதமும் 4 நாட்களும் ஆகும். இதற்கமைய 5 கூட்டத் தொடர்களைக் கொண்ட இப்பாராளுமன்றம் 390 நாட்கள் கூடியுள்ளதுடன், அரசியலமைப்புத் திருத்தங்கள், அடுத்துவரும் ஜனாதிபதி பாராளுமன்றத்தின் ஊடாகத் தெரிவு, நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் சமர்ப்பிப்பு, தீர்மானங்கள் மூலம் ஆணைக்குழுவின் தலைவரை/உறுப்பினரையோ பதவியில் இருந்து நீக்கியமை, ஒழுக்காற்று நடவடிக்கையின் காரணமாகப் பாராளுமன்ற உறுப்பினர்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டமை போன்ற பல முக்கிய நிகழ்வுகள் இக்காலப் பகுதியில் இடம்பெற்றுள்ளன.
அரசியலமைப்புத் திருத்தங்கள்
அதற்கமைய, 2020 ஆம் ஆண்டில் ஒன்பதாவது பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அரசியலமைப்பைத் திருத்துவதற்காக அப்போதைய நீதி அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி அவர்களால் “இருபதாவது அரசியலமைப்புத் திருத்தச்” சட்டமூலம் 2020 செப்டெம்பர் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஒக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களிலும் சட்டமூலம் குறித்த இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடைபெற்றதுடன், விவாதத்தைத் தொடர்ந்து, விசேட பெரும்பான்மையுடன் இது நிறைவேற்றப்பட்டது. இதில் குறித்த அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக 56 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் பதிவாகின. குழுநிலையைத் தொடர்ந்து மூன்றாவது மதிப்பீடும் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 156 வாக்குகள் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாகவும், 65 வாக்குகள் எதிராகவும் பதிவாகியிருந்தன. இதற்கமைய குறித்த அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. 2020 ஒக்டோபர் 29ஆம் திகதி சபாநாயகர் குறித்த சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தியதும் இருபதாவது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைக்கு வந்தது.
அத்துடன், 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற நெருக்கடி நிலைமை காரணமாக கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகியதும் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட கௌரவ ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்த அமைச்சராக இருந்த கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் அரசியலமைப்பைத் திருத்துவதற்காக “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” சட்டமூலம் 2022 ஓகஸ்ட் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஒக்டோபர் 20 மற்றும் 21ஆம் ஆகிய இரு தினங்களும் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இடம்பெற்று இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும், எதிராக 01 வாக்கும் பதிவுசெய்யப்பட்டன. குழுநிலையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய திருத்தங்கள் உள்ளடக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 174 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் பதிவாகியிருந்தது. இதற்கு அமைய இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் திருத்தங்களுடன் இருபத்தியோராவது அரசியலமைப்புத் திருத்தமாக நிறைவேற்றப்பட்டது. இது 2022 ஒக்டோபர் 31ஆம் திகதி சபாநாயகரினால் கையொப்பமிடப்பட்டு சான்றுரை வழங்கப்பட்டது முதல் இருபத்தியோராவது அரசியலமைப்புத் திருத்தமாக நடைமுறைக்கு வந்தது.
நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஆணைக்குழுவின் தலைவர் /உறுப்பினரை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை
வலுசக்தி அமைச்சர் கௌரவ உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்
வலுசக்தி அமைச்சர் கௌரவ உதய கம்மன்பில அவர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையே ஒன்பதாவது பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட முதலாவது நம்பிக்கையில்லாப் பிரேரணையாகும். எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச உள்ளிட்ட 43 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. இந்தப் பிரேரணை 2021 ஜூலை மாதம் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விவாதத்தின் இறுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 61 வாக்குகளும், எதிராக 152 வாக்குகளும் பதிவாகியிருந்ததுடன் அந்தப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
ஜே.டபிள்யூ.எம்.ஜே.பி.கே ரத்னாயக்கவை அவருடைய பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை நிறைவேற்றம்
2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய குறித்த ஆணைக்குழுவின் அப்போதைய தலைவரும், ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஜே.டபிள்யூ.எம்.ஜே.பி.கே ரத்னாயக்கவை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை பிரதமரும், பொதுநிர்வாக, உள்விவகார, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்த்தன அவர்களினால் முன்வைக்கப்பட்டது. இது குறித்த விவாதம் 2023 மே மாதம் 24ஆம் திகதி நடைபெற்றதுடன், இதற்கான வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டு 46 மேலதிக வாக்குகளால் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
சுகாதார அமைச்சர் கௌரவ கெஹலிய ரம்புக்வெல்ல அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை
சுகாதார அமைச்சர் கௌரவ கெஹலிய ரம்புக்வெல்ல அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 45 பேரின் கையொப்பத்துடன் முன்வைக்கப்பட்டது. இந்தப் பிரேரணை குறித்த விவாதம் 2023 செப்டெம்பர் 06, 07 மற்றும் 08 ஆகிய திகதிகளில் இடம்பெற்றது. மூன்று நாள் விவாதத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரேரணைக்கு எதிராக 113 வாக்குகளும், எதிராக 73 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கு அமைய 40 மேலதிக வாக்குகளால் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை
2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 45 பேர் கையொப்பமிட்டு சமர்ப்பித்த சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த விவாதம் மார்ச் 19, 20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் இடம்பெற்றது. விவாதத்தின் இறுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரேரணைக்கு எதிராக 117 வாக்குகளும், ஆதரவாக 75 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கு அமைய நம்பிக்கையில்லாப் பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதுடன், இதனைத் தொடர்ந்து சபாநாயகர் விசேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார்.
பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக வெற்றிடமான ஜனாதிபதிப் பதவிக்கு உறுப்பினர்களின் வாக்குகளால் உறுப்பினர் ஒருவரை நியமித்தல்
நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2022 ஜூலை மாதம் 14 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதிப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததுடன், அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய வெற்றிடமான ஜனாதிபதிப் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுவரை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக செயற்பட்டார்.
அதற்கமைய, 1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் பிரகாரம் ஜூலை 19 ஆம் திகதி பாராளுமன்றம் கூடியதுடன், அதன்போது அடுத்துவரும் ஜனாதிபதிப் பதவிக்கு பதில் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெரும மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அநுர குமார திசாநாயக்க ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதி ஒருவரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு 2022 ஜூலை 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறத்துடன், அதன்போது மேலதிக வாக்குகளால் பதில் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க இந்நாட்டின் எட்டாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இரகசிய வாக்கெடுப்பில் கௌரவ ரணில் விக்ரமசிங்கவுக்கு 134 வாக்குகள் கிடைத்ததுடன், கௌரவ டலஸ் அழகப்பெருமாவுக்கு 82 வாக்குகளும் கௌரவ அநுர குமார திஸாநாயக்கவுக்கு 03 வாக்குகளும் கிடைத்தன.
உறுப்பினர்களின் பாராளுமன்ற சேவைக்காலத்தை இடைநிறுத்துதல்
2023 ஆகஸ்ட் 23 ஆம் திகதி பாராளுமன்ற வாய்மூல விடைக்கான வினாக்களின் மேலதிக கேள்விகள் கேட்கும் போது ஏற்பட்ட சிக்கல் நிலைமை காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நளின் பண்டார ஜயமஹா மற்றும் கௌரவ வசந்த யாப்பா பண்டார ஆகியோர் அக்கிராசனத்துக்கு அருகே வந்து கோஷமெழுப்பினர். அதன்போது பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ பாராளுமன்ற அமர்வை 10 நிமிடங்களுக்கு இடைநிறுத்தியதுடன், அதனையடுத்து அக்கிராசனத்துக்கு வந்த சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் அன்றைய பாராளுமன்ற அமர்விலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நளின் பண்டார ஜயமஹா மற்றும் கௌரவ வசந்த யாப்பா பண்டார ஆகியோரை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தார்.
மேலும், 2023 ஒக்டோபர் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது ஏற்பட்ட குழப்ப நிலைமையை கருத்தில் கொண்டு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் மான்னப்பெருமவின் பாராளுமன்ற சேவைக்காலத்தை அன்றைய தினம் முதல் நான்கு வாரங்களுக்கு இடைநிறுத்துவதாக அறிவித்தார். பாராளுமன்ற சபை மண்டபத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அதனைத் தொடுவது நிலையியற் கட்டளைகள் 77(3) இன் பிரகாரம் பாரதூரமான ஒழுங்கீனம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதேவேளை, 2023 ஒக்டோபர் 20 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கே. சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹன பண்டார ஆகியோருக்கிடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அந்த உறுப்பினர்களின் பாராளுமன்ற சேவைக்காலாம் 2023 டிசம்பர் 02 ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்த பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவரப்பட்டு நடவடிக்கை எடுப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் கருத்திற்கொள்ளப்பட்ட பின்னர், பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்ட பரிந்துரையின் பிரகாரம் இந்தப் பிரேரணை 2023 டிசம்பர் 02 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டது. இதன்போது இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 01 வாக்கும் வழங்கப்பட்டது. அத்துடன், 03 உறுப்பினர்கள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தனர். மேலும், 2023.05.23 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் கட்டுநாயக்க, பணடரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரமுகர் முனையத்தின் ஊடாக சட்டவிரோதமான முறையில் 70 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியுடன்கூடிய தங்கம் மற்றும் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளை இலங்கைக்குள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழுவின் பரிந்துரைக்கு அமைய அவரின் பாராளுமன்ற சேவைக்கலாம் ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டது. அலி சப்ரி ரஹீம் அவர்களின் முறையற்ற செயற்பாடு காரணமாக பாராளுமன்றத்தினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நிலையியற் கட்டளை 118 இன் ஏற்பாடுகளுக்கு அமைய அவரது சேவைக்காலத்தை 2024 மார்ச் 06 ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்துவதற்கு பாராளுமன்றத்தில் பிரேரணை முன்வக்கப்பட்டு இந்த இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது