அறிவும் திறனும் பெண்களிடம் இருந்தால் அனைத்து சவால்களையும் வென்று முன்னேறிச்செல்ல முடியும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
மிலாகிரிய புனித போல்ஸ் மகளிர் கல்லூரியின் மாணவ பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் அண்மையில் (13) கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த செயலாளர் நாயகம், தற்பொழுது பாராளுமன்றத்தில் சிறுபான்மையாக உள்ள பெண் உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய பணிகள் தொடர்பில் நினைவு படுத்தியதுடன், பாராளுமன்ற செயன்முறை மற்றும் அதன் பணிகள் தொடர்பில் விளக்கமளித்தார்.
மிலாகிரிய புனித போல்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகளுக்குப் பாராளுமன்ற முறைமை தொடர்பில் பிரயோக ரீதியான அனுபவங்களை வழங்கும் வகையில் கல்லூரி மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த நிகழ்வில் பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் திணைக்கள பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம் ஜயலத் பெரேராவும் கலந்துகொண்டார். இங்கு உரையாற்றிய அவர், மாணவ பாராளுமன்றத்தினால் தலைமைத்துவப் பண்புகளை தமது வாழ்க்கைக்குச் சேர்த்துக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியதுடன், வாழ்க்கையில் சவால்களை வெற்றிகொள்ளுவதற்குத் தேவையான பக்குவத்தை மாணவ பாராளுமன்றம் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.
அதற்கமைய, மிலாகிரிய புனித போல்ஸ் மகளிர் கல்லூரி மாணவ பாராளுமன்றத்தின் கன்னி அமர்வை ஆரம்பிக்கும் வகையில் சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. அதனையடுத்து. பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மற்றும் அங்கத்தவர்களின் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது. அதன் பின்னர் மாணவ பாராளுமன்றத்தின் அமைச்சர்கள் தாம் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் தொடர்பில் சபையைத் தெளிவுபடுத்தினர்.
மாணவ பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவிகளுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் செயலாளர் நாயகத்தின் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மிலாகிரிய புனித போல்ஸ் மகளிர் கல்லூரி அதிபர் சுரேகா சிறிவர்தன, பிரதி அதிபர், மாணவ பாராளுமன்றத்துக்குப் பொறுப்பான ஆசிரியர் தம்மிக்கா திசாநாயக்க உள்ளிட்ட கல்லூரியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.