பாராளுமன்ற வளாகத்திலுள்ள பெறுமதிமிக்க கட்டடக்கலையைப் பாதுகாக்கும் குழுவின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தலைமையில் அண்மையில் (13) பாரளுமன்றத்தில் இடம்பெற்றது.
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பெறுமதிமிக்க கட்டட வடிவமைப்பில் காணப்படும் கலாசார அடையாளங்கள், இயற்கை நிலக்காட்சி மற்றும் சூழல், வரலாற்று ரீதியாகப் பொருந்தும் சூழல், தேசிய அடையாளம் ஆகியவற்றின் காரணமாக, எதிர்கால சந்ததியினருக்காக அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பௌத்த மத மற்றும் கலாசார விவகார அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், தேசிய ஆவணக்காப்பகத் திணைக்களம், தேசிய அருங்காட்சியகத் திணைக்களம், மத்திய கலாசார நிதியம், தொல்பொருள் திணைக்களம், தேசிய கலைச் சபை, அரசாங்கத் தகவல் திணைக்களம், ஈனா டி சில்வா நம்பிக்கை நிதியம், ஜெஃப்ரி பாவா அறக்கட்டளை நிதியம், தேசிய அருங்கலைகள் பேரவை கைப்பணிப்பொருட்கள் சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளுக்கு அமைய பாராளுமன்றத்தில் காணப்படும் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள் மற்றும் பொருட்கள் தொடர்பில் இதன்போது ஜெஃப்ரி பாவா அறக்கட்டளை நிதியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
இதற்கமைய பாராளுமன்றக் கட்டடம், செங்கோல், வெள்ளிக்கதவு, பித்தளைக் கதவு, சிங்க உருவத்துடன் கூடிய கதவு, சபா மண்டபத்தின் தடை எல்லை, 18 பித்தளைக் கொடிகள், கொத்து விளக்கு, ஒன்றுகூடல் மண்டபத்தின் கூரைத்தகடு, பித்தளைக் கதவுக்கு முன்னால் உள்ள கூரைத் தகடு,18 வைபவக் கொடிகள், கோட்டுக் கலை, உறுப்பினர்களின் நுழைவாயிலில் உள்ள மரச்சுவரோவியம், பணியாளர்கள் நுழைவாயிலில் உள்ள சுவரோவியம், பிரமுகர்களின் முகப்புக்கூடத்திலுள்ள சுவரோவியங்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவுக்கூடத்தில் உள்ள ஓவியங்கள், இரண்டாவது மாடியிலுள்ள புகைப்படத்தொகுப்பு, கீழ் மாடியிலுள்ள புகைப்படத்தொகுப்பு மற்றும் வேறு பெறுமதி மிக்க புகைப்படம்/ஓவியங்கள் மற்றும் காட்சிக்கூடத்தில் உள்ள தொல்பொருட்களைப் பாதுகாப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி கூடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பணியாட்தொகுதியின் பிரதானியும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன மற்றும் படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன உள்ளிட்ட பாராளுமன்றத்தின் திணைக்களங்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.