பாலின அடிப்படையிலான சம்பள வேறுபாடு குறித்த ஆய்வு அறிக்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே அவர்களால் அண்மையில் (08) சபாநாயர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் எதிர்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச ஆகியோருக்கு வழங்கிவைக்கப்பட்டது.
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் முன்முயற்சியில் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு (Women and Media Collective) உள்ளிட்ட ஆய்வாளர்களினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கலாநிதி ஹர்ஷ டி சில்வா, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் இணை உதவித் தலைவர் கௌரவ ரோஹிணி குமாரி விஜேரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இரான் விக்கிரமரத்ன ஆகியோர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகையில், இந்த சம்பள வேறுபாட்டை மாற்றுவதற்கு சட்டம் இயற்றுதல் மற்றும் புதிய கொள்கைகள் உருவாக்கப்படுவது முக்கியமாகும் எனத் தெரிவித்தார். அத்துடன், இந்த உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பில் ஏற்பாடுகள் உள்வாங்கப்படவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாலின அடிப்படையிலான சம்பள வேறுபாட்டை களைவதற்கு சமூகத்தில் உள்ள மக்களிடையே மனப்பாங்கு ரீதியான மாற்றம் ஏற்பட வேண்டும் என ஒன்றியத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், இந்தப் பணி வெற்றியடைய பங்களித்த அனைவருக்கும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹணதீர நன்றி தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி சேபாலிக்கா கோட்டேகொட தலைமையிலான ஆய்வாளர்கள் குழு, இந்த ஆய்வறிக்கை தொடர்பில் குறிப்பிடுகையில், இலங்கையில் தொழிலாளர் சந்தையில் பாலின அடிப்படையிலான சம்பள வேறுபாடு, முதன்மையாக சம்பளம் பெறாத பராமரிப்பு சேவையுடன் நெருங்கிய தொடர்புடையது என குறிப்பிட்டனர்.
உயர்ந்த சம்பளம் பெரும் தொழில்களில் பெண்கள் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளதுடன், குறைந்த சம்பளம் பெரும் சேவை சார்ந்த தொழில்களில் பெண்கள் செறிந்து காணப்படுவதாகவும், பெண்களில் குறிப்பிடத்தக்க அளவு விகிதாசாரம் பகுதி நேர வேலை மற்றும் சம்பளம் இல்லாத பராமரிப்பு சேவைகளில் ஈடுபடுவதாகவும் அந்த ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த நிகழ்வில் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு, பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு (Women and Media Collective), சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் (USAID), தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI) உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.