சீன ஹைனான் மாகாண மக்கள் காங்கிரஸின் நிலையியற் குழுவின் உப தலைவர் உள்ளிட்ட அங்கத்தவர்கள் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவுடன் சந்திப்பு
சீன ஹைனான் மாகாண மக்கள் காங்கிரஸின் நிலையியற் குழுவின் உப தலைவர் கலாநிதி ஸுன் தஹாய் (Dr Sun Dahai) அவர்களின் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் அண்மையில் (16) பாராளுமன்றத்தில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர, கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் கௌரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா, உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டி. வீரசிங்க, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது சபாநாயகருடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஹைனான் மாகாண மக்கள் காங்கிரஸின் நிலையியற் குழுவின் உப தலைவர் இலங்கையின் அபிவிருத்திக்கு ஹைனான் மாகாணத்தினால் வழங்கக்கூடிய உதவிகள் தொடர்பிலும் அதற்காக மேற்கொள்ளும் நடைமுறைகள் தொடர்பிலும் விளக்கமளித்தார். அதன்படி, இலங்கையில் முதலீடு செய்வது அந்த மாகாணத்தின் தொழில்முனைவோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குத் தேவையான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஹைனான் மாகாணத்தின் வர்த்தகர்கள் கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் அவர் நினைவுபடுத்தினார். அத்துடன், அந்த மாகாணத்திற்கும் இலங்கைக்கும் இடையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர், இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் காணப்படும் நீண்ட நட்புறவை நினைவுபடுத்தினார்.இந்நாட்டின் விவசாயத்தை மேம்படுத்த வழங்கும் ஆதரவுகளை ஹைனான் மாகாணத்தின் மக்கள் காங்கிரஸின் அதிகாரிகளுக்கு நன்றியைத் தெரிவித்தார். அதற்கமைய, சீனா இதுவரை இலங்கைக்கு வழங்கிய ஆதரவுகளுக்கு நன்றியைத் தெரிவித்த சபாநாயகர் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு எதிர்காலத்திலும் சீனாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
அதனையடுத்து, இந்நாட்டின் விவசாயம் தொடர்பான தற்போதைய நிலைமை மற்றும் சவால்கள் பற்றி கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர ஹைனான் மாகாணத்தின் மக்கள் காங்கிரஸின் அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார். அதற்கமைய, இந்நாட்டின் பிரதான ஏற்றுமதி பயிருக்கு சந்தையை ஏற்படுத்தும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதன் முக்கியத்துவம் தொடர்பில் வருகை தந்த பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். மேலும், இந்நாட்டின் விவசாயப் பயிர்களுக்கு உரம் பயன்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டி. வீரசிங்கவினால் தெளிவுபடுத்தப்பட்டது. அது தொடர்பான அறிக்கையையும் ஹைனான் மாகாண மக்கள் காங்கிரஸின் நிலையியற் குழுவின் உப தலைவருக்கு வழங்கிவைத்தார்.
இலங்கையின் விவசாயத் துறையின் மேம்பாட்டுக்கு அவர்களின் விசேட நிபுணத்துவ அறிவைக் கொண்ட வளவாளர்களை வழங்குவதற்கும், அறிவுப் பகிர்வு வேலைத்திட்டத்தின் ஊடாக விவசாயத் துறையின் விருத்திக்கு நடவடிக்கை எடுப்பதாக ஹைனான் மாகாண மக்கள் காங்கிரஸின் நிலையியற் குழுவின் உப தலைவர் இதன்போது தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளர் எம். ஜயலத் பெரேரா உள்ளிட்ட பாராளுமன்ற அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.