சேவையிலிருந்து விலகிச் சென்றதாகக் கட்டளை பிறக்கப்பட்ட வைத்தியர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய நிதியை வசூலிப்பதன் தற்போதைய நிலைமைகள் குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழு ஆராய்வு
- பயற்சியைக் கைவிட்டுச் சென்ற தாதிய மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய தொகை குறித்தும் உபகுழுவில் அவதானம்
சேவையிலிருந்து விலகிச் சென்றதாகக் கட்டளை பிறப்பிக்கப்பட்ட வைத்தியர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய நிதியை வசூலிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழு விசாரணைகளை நடத்தியிருந்ததுடன், இதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படுவதாகவும், இதில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாககவும் உபகுழுவிற்கு ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
வைத்தியசாலை முகாமைத்துவம் மற்றும் பணியாளர் முகாமைத்துவம் குறித்த கணக்காய்வு பற்றி ஆராயும் நோக்கில் குறித்த உபகுழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட தலைமையில் 2024.07.09ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்து ஆராயப்பட்டது.
வெளிநாட்டுக்குச் சென்று மீண்டும் சேவைக்குத் திரும்பாத வைத்தியர்களின் எண்ணிக்கை, அவ்வாறானவர்களிடமிருந்து அரசாங்கத்துக்கு வசூலிக்கப்பட வேண்டிய நிதி வசூலிக்கப்பட்டுள்ளதா? அவ்வாறு வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு? எத்தனை வைத்தியர்களிடமிருந்து இவ்வாறு நிதி சூலிக்கப்படவேண்டியுள்ளது போன்ற விடயங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை அரசாங்கக் கணக்குகள் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழுவுக்கு வழங்குமாறு அதன் தலைவர் கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
இந்தப் பணத்தை வசூலிப்பதற்காக அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக சுகாதார அமைச்சின் சட்டப் பிரிவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டிருபு்பதாகவும், வைத்தியர்களின் எண்ணிக்கை மற்றும் சுகாதார அமைச்சின் சட்டப் பிரிவினால் இந்தத் தொகையை வசூலிப்பது தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதில் உள்ள வைத்தியர்களின் விபரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை வழங்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
சுகாதார அமைச்சின் கீழுள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இணைத்துக்கொள்ளப்பட்ட சிலர் பயிற்சியைப் பூர்த்தி செய்யாது இடைநடுவில் வெளியேறிச் சென்றிருப்பதாகவும், அவ்வாறு சென்றவர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு அமைச்சு தவறியமை குறித்தும் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
இதற்கமைய, இவ்வாறு பயிற்சியை இடைநடுவில் விட்டு வெளியேறிய தாதிய மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய பணத்தை வசூலிக்க எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள், அவ்வாறு வசூலிக்கப்பட வேண்டியுள்ள மாணவர்களின் எண்ணிக்கை போன்ற முழுமையான தகவல்கள் அடங்கிய விரிவான அறிக்கையை வழங்குமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
மேலும், சுகாதார அமைச்சு மற்றும் வைத்தியசாலைகள், அவற்றுடன் இணைந்த நிறுவனங்களில் பணியாளர்கள் சேவைக்கு வரும்போதும், சேவையிலிருந்து செல்லும்போதும் கைவிரல் அடையாளங்களைப் பதிவு செய்யும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அரசாங்க சேவையை வினைத்திறன் மிக்கதாகவும், ஊழல் அற்றதாகவும் மாற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு சுகாதார சேவையும் இணைந்து கொள்ள வேண்டுமென தலைவர் வலியுறுத்தினார்.
இந்தக் குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஞ்சுளா திஸாநாயக்க ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.