கொழும்பில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் காணி பணிப்பாளர் சபையின் அனுமதி இன்றி 99 வருட குத்தகைக்கு வழங்கிவைப்பு பணிப்பாளர் சபையின் அனுமதி பெறாத விடயங்களும் குத்தகை ஒப்பந்தத்தில் உள்ளடக்கம் கோப் குழுவில் வெளிவந்தது

  • நகர அபிவிருத்தி அதிகாரசபையின் சகல முதலீட்டுக் காணிகள் குறித்து அறிக்கை வழங்கவும் கோப் குழு
  • கொழும்பு குடிசைவாசிகளுக்காக அமைக்கப்பட்ட தொடர்மாடித் தொகுதிகளில் 66 வீடுகள் இன்னமும் காலியாக உள்ளன 2023 மற்றும் 2024 மே வரையில் இந்த வீடுகளைப் பராமரிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு 600 மில்லியனுக்கும் அதிகமான செலவு கோப் குழுவில் வெளிவந்தது

கொழும்பு 02 ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான 06 ஏக்கர் காணி 2019ஆம் ஆண்டு பணிப்பாளர் சபையின் அனுமதி இன்றி 12 பில்லியன் ரூபாவுக்கு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) தெரியவந்தது. இந்தக் காணிக்கான குத்தகை ஒப்பந்தம் தயாரிக்கப்படும்போது பணிப்பாளர் சபைக்கு முன்வைப்பட்டு, அனுமதிக்கப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு மேலதிகமாக பணிப்பாளர் சபையின் அனுமதியைப் பெறாது வேறு நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டிருப்பதும் இங்கு புலப்பட்டது. இருந்தபோதும் குறித்த ஒப்பந்தத்தின் வரைபு தொடர்பில் சட்டப் பணிப்பாளருகு்கு எதிராக ஒழுங்காற்று விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பிட்ட காணியில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவில்லையென்றும் கோப் குழுவில் வெளிப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹித அபேகுணவர்தன தலைமையில் அண்மையில் (09) கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவிலேயே இந்த விடயங்கள் தெரியவந்தன.

மேலும் டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையை அண்டிய பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 2 ஏக்கர் 2 ரூட் மற்றும் 21.4 பேர்ச் காணியை பணிப்பாளர் சபையின் உத்தியோகபூர்வ அனுமதியின்றி குத்தகைக்கு வழங்கியதன் காரணமாக அதிகாரசபைக்கு 330 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. இந்தச் சம்பவங்கள் தொடர்பான முறையான அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் குழுவுக்கு அனுப்பி வைக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கணக்காய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிடுகையில், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கணக்குக் கட்டமைப்பில் பாரிய பிரச்சினைகள் கண்டறியப்பட்டிருப்பதாகவும், அதிகார சபைக்குச் சொந்தமான முதலீட்டுக் காணிகளின் பெறுமதி மதிப்பீடுகள் குறித்து பிரச்சினை இருப்பதாகவும் தெரிவித்தனர். பாராளுமன்றக் கட்டடத் தொகுதி இருக்கும் காணியின் உரிமை இன்னமும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்குக் காணப்படுவதாகவும், இந்த உரிமையைப் பாராளுமன்றத்துக்கு மாற்றிக் கொடுக்குமாறும் ஆலோசனை வழங்கினர். நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான அனைத்து முதலீட்டு காணிகளின் விபரங்கள் அடங்கிய முழுமையான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் குழுவில் சமர்ப்பிக்குமாறும் கோப் குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.

நகர அபிவிருத்தி அதிகாரசபையானது கொழும்பை சுற்றியுள்ள குடிசைவாழ் மக்களுக்கான நகர மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 48,156 மில்லியன் அரசாங்க நிதியைப் பயன்படுத்தி 22 வீட்டுத் திட்டங்களில் 13,602 வீடுகளை நிறைவு செய்துள்ளது. எனினும் அந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் 66 வீடுகள் இன்னும் காலியாக உள்ளதாக கணக்காய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். காலியாக உள்ள வீடுகளின் உரிமையாளர்களை விரைவில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், பூர்த்தி செய்யப்பட்ட வீட்டுத் திட்டங்களில் ஒரு வீட்டுத் திட்டத்திற்கு மாத்திரமே கூட்டு ஆதன முகாமைத்துவ சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக கணக்காய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.  இதன் மூலம் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு மே மாதம் வரை 667.6 மில்லியன் ரூபாவை நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த வீடுகளின் பராமரிப்புக்காக செலுத்தியுள்ளதாக தெரியவந்தது.

இதன்படி வீடுகளின் உரிமை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அந்த வீடுகளை பராமரிக்கும் பொறுப்பு நகர அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து நீக்கப்படும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும், நாளாந்தம் கொழும்புக்கு வரும் மக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்பது குறித்தும் குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதிகாரசபையினால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்ட 2 வாகன தரிப்பிடங்களின் பணிகள் 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறுத்தப்பட்டு இதுவரை 230 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது.  அதன்படி, இந்த 2 வாகன நிறுத்துமிடங்களும் தற்போதைய நிலையில் பயன்படுத்தப்படும் வகையில் பணிகளை முடிக்க கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்திற்கு, இராஜாங்க அமைச்சர் கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தயாசிறி ஜயசேகர,கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ (மேஜர்) சுதர்சன தெனிபிட்டிய, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ மற்றும் கௌரவ பிரேம்நாத் சி. திரு.தொலவத்த ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

ඊ-මේල් මගින් පිලිතුරු දෙන්න එය පිට

කරුණාකර ඔබගේ අදහස් ඇතුළත් කරන්න.
කරුණාකර ඔබගේ නම ඇතුලත් කරන්න