இன்றைய தினம் பலாங்கொடையில் இயங்கி வரும் ஆர் பி சி சி தமிழ் வித்யாலயாவில் பயின்று வரும் மல்டி டிஸ்ஆர்டர் ஆட்டிசம் நோயினால் 70 வீதம் பாதிக்கப்பட்டுள்ள 9 வயதான மாற்றுத்திறனாளி சிறுவனான பாக்கியராசா முரளிதரம், அவருடைய ஆசிரியரின் கடுமையான பயிற்சி மற்றும் தீவிர முயற்சியின் காரணமாக தன்னுடைய அதிக ஞாபகத் திறனின் மூலம் உலக நாடுகளின் தலை நகரங்களை அவற்றின் கொடிகளை வைத்து அடையாளம் காட்டுதல், உலக நாடுகள் ஒவ்வொன்றினதும் நாணயங்கள்,
ஒவ்வொரு நாடுகளிலும் பேசப்படும் மொழிகள், உலக நாடுகளின் தற்போதைய தலைவர்கள் பற்றி,
இலங்கை ,உலக நாடுகள் மற்றும் விளையாட்டு துறை சார்ந்த பொது அறிவு கேள்விகளுக்கான பதில்கள் போன்றவற்றை மனப்பாடமாக ஒப்புவித்த அதேவேளை, உலக வரைபடத்தில் நாடுகளின் அமைவிடங்களையும் அடையாளப்படுத்தினார்.மூன்று மொழிகளிலும் இவர் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆட்டிசம் என்ற நரம்பியல் சம்பந்தமான நோயின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கக்கூடிய இந்த சிறுவனின் அனைத்து முயற்சிகளையும் முறையாக பரிசோதனை செய்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம், அவற்றை உறுதி செய்து அவருக்கு சோழன் உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கி ஊக்கப்படுத்துகிறது.
இந்த நிகழ்வில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, தலைமைச் செயற்குழு உறுப்பினர் பெருமாள் நீலமேகம் போன்றோர் நடுவர்களாக மேற்பார்வை செய்து உலக சாதனையை உறுதி செய்தனர். சோழன் உலக சாதனை படைத்த மாணவனை அவருடைய ஆசிரியை திருமதி.சுந்தரம் எளிசபத், பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.P.தம்பிராஜா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.
உலக சாதனை படைத்த மாணவனை சோழன் உலக சாதனைப் புத்தக அமைப்பின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் அவர்கள் இந்தியாவில் இருந்து தொலைபேசி ஊடாக அழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.