மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றி மிகவும் முன்னுதாரணமான பாராளுமன்றத்தைக் கட்டியெழுப்ப அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக இன்று (01) இடம்பெற்ற புதிய வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட சபாநாயகர் கௌரவ (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.
புதிய உறுப்பினர்கள் பலர் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருக்கும் பின்புலத்தில் பாராளுமன்றப் பணியாட் தொகுதியினரின் பணியைப் பாராட்டிய சபாநாயகர், எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தனித்துவமான அடையாளத்துடன் கூடிய பாராளுமன்றத்தை உருவாக்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றார். மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் பாராளுமன்றத்தின் வகிபாகம் முக்கியமானது என்றும், பாராளுமன்றத்தின் நோக்கத்தில் மதிப்பைச் சேர்ப்பதற்கு வெளிப்படைத் தன்மை, வினைத்திறன் போன்ற விசேடமான அம்சங்களை மேம்படுத்தி தமது பணிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சபாநாயகர் இங்கு வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர குறிப்பிடுகையில், நாட்டில் பல மாற்றங்கள் ஏற்படும் ஆண்டான 2025 ஆம் ஆண்டில் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் பாரிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றார். பாராளுமன்றத்தின் பணியாட்தொகுதியினர் இதுவரை ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், நாட்டின் உயரிய நிறுவனமான பாராளுமன்றத்தில் பணியாற்றும் அனைவரினதும் பங்கு மிகவும் முக்கியமானது என்றும் வலியுறுத்தினார். புதிய வருடத்தின் தொடக்கத்தில், சிறந்த அணுகுமுறைகளுடன் மிகவும் திறமையான சேவையை வழங்குவதன் மூலம் இலங்கையின் பெயர் உலகளாவிய ரீதியில் பிரகாசிக்க வேண்டும் என அவர் வாழ்த்தினார்.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலின் பின்னர் பத்தாவது பாராளுமன்றத்திற்குப் பெருமை மிக்க ஆரம்பத்தை வழங்கவும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி பணியாளர்களுக்குப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். புதிய வருடத்திற்கான வாழ்த்தைத் தெரிவித்த செயலாளர் நாயகம், போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்று நியமனத்தைப் பெறும் திறமையான பணியாளர்கள் இலங்கைப் பாராளுமன்றத்தில் இருப்பதாகவும் அவர்களின் அர்ப்பணிப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பணிகளை நிறைவேற்றுவதற்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு மேலதிகமாக, தினமும் பாராளுமன்றத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு தூதுவர்கள், விருந்தினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்களுக்கு சிறந்த சேவையை வழங்கிவரும் பணியாளர்கள், இணைந்த சேவையின் பணியாளர்கள் அனைவருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளில் முறையான பாதுகாப்பை வழங்குவதன் மூலம் பங்களித்த இலங்கை பொலிஸ் உட்பட அனைத்து பாதுகாப்புப் படையினருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்றப் பணியாட் தொகுதியினர் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற “Clean Sri Lanka” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வின் நேரடித் தொலைக்காட்சி ஒளிபரப்புடன் இணைந்துகொண்டதுடன், “Clean Sri Lanka” நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான சத்தியப்பிரமாணம்/உறுதிமொழியையும் எடுத்துக்கொண்டனர்.
பாராளுமன்ற பதவியணித் தலைமை அதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்ற திணைக்களங்களின் பிரதிநிதிகள், இணைந்த சேவைகளின் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.


















